Skip to main content

மேரி கோம் வெண்கலம் வென்றார்... நடுவரின் முடிவால் இந்தியா அதிருப்தி!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019


11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து மற்றும் கொலம்பிய வீராங்கனைகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல் முறையீடு செய்தது. ஆனால், அதனை குத்துச் சண்டை சம்மேளனம் நிராகரித்தது.

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் இதுவரை  6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். அரையிறுதியில் வெற்றி பெற்ற துருக்கி வீராங்கனை புசெனாஸ், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரஷ்யா வீராங்கனை லிலியாவை எதிர்கொள்கிறார்.

Next Story

மணிப்பூரில் பயங்கர கலவரம்; பிரதமரிடம் உதவி கேட்ட மேரி கோம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும் பழங்குடி அல்லாத சமூகங்களும் உள்ளன. மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 

 

இந்நிலையில், அம்மாநிலத்தின் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைந்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் பேரணி நடத்தியது. அதேசமயம், இவர்களுக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பினரும் தங்களது பேரணியை நடத்தினர். இதில், சவ்ரசந்திரபூர் எனும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு கலவரமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கலவரம் நடந்த இடத்தில் கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களை கலைத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help
பிரேன் சிங்

 

இந்நிலையில், நேற்றிரவு மணிப்பூரின் சில இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான மற்றும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் மணிப்பூரில் குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திலும், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களிலும் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

 

முன்னதாக மணிப்பூர் பாஜக அரசு, பாதுகாக்கப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட்ட காடுகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

 

அதேபோல், கடந்த வாரம் மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங் அம்மாநிலத்தின் சூராசந்த்பூர் பகுதியில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்தப் பகுதிக்கு வருகை தரவிருந்தார். ஆனால், அவரது வருகைக்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 28ல் இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் பிரேன் சிங் பங்கேற்க இருந்தார். ஆனால், அதற்கு முன்தினமான 27ம் தேதி சில மர்ம நபர்கள் முதல்வர் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும், முதல்வரின் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. 

 

தற்போது ஏற்பட்டுள்ள பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையேயான கலவரத்தின் காரணமாக அங்கு ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help
மேரி கோம்

 

மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்துள்ளார். 

 

 

Next Story

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மேரிகோம் தோல்வி!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

mary kom

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

இந்தநிலையில் இன்று நடந்த போட்டிகளில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல், குத்துச்சண்டை ஹெவி வெயிட் பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இன்று முன்னேறினார்.

 

இந்தநிலையில், தற்போது நடைபெற்ற (51 கிலோ பிரிவு) குத்துசண்டை போட்டியில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், இந்தியாவின் மேரி கோம் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவிடம் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.