16வது சீசன் ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒன்பதாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் மூன்று ரன்களில் வெளியேற பின்னர் வந்த மந்தீப் சிங் ரன்கள் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் நிதிஷ் ரானாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த ரிங்கு சிங் குர்பாஸுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். நிலையாக ஆடிய இந்த ஜோடியில் குர்பாஸ் 57 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் ரசல் முதல் பந்திலேயே வெளியேற ஷர்துல் தாக்கூர் ரிங்கு சிங் உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அசத்திய ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.
205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி, டுப்ளசிஸ் ஜோடி நிலையான துவக்கத்தை கொடுத்தாலும் பின் வந்த ஆட்டக்காரர்கள் பெரிதும் சோபிக்காததால் பெங்களூர் அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி நான்கு விக்கட்டுகளையும், வெங்கடேஷ் ஐயருக்கு பதில் இம்பாக்ட் ப்ளேயராக சேர்க்கப்பட்ட சியாஸ் சர்மா மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.