இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஒருநாள் தொடரின் கடைசி போட்டியான இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 43 ஆவது சதத்தை பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 114 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடித்த 114 ரன்களுடன் சேர்த்து கோலி கடந்த 10 ஆண்டுகளில் 20,018 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் என்ற பட்டியலில் சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனையை கோலி முறியடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் 18,962 ரன்கள் அடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதற்கும் அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளில் 15.962 ரன்கள் குவித்திருந்தார். தற்போது 20000 ரன்களை கடந்த நிலையில், 10 ஆண்டுகளில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதன்மூலம் 10 ஆண்டுகளில் 20000 ரன்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.