உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.