சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (26.05.2024) நடைபெற்றது. இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி சார்பாக களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்களில் போல்ட் அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், நிதிஷ் ரெட்டி அவுட்13 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் ஹென்றிக் கிளசன் 16 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. அதே சமயம் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணியில் பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட் எடுத்து அசத்தினர்.
இந்நிலையில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதனையடுத்து கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக கொல்கத்தா அணி சார்பில் களமிறங்கிய சுனில் நரைன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்திலேயே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இருப்பினும் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 17 வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 வது முறையாக கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 2012, 2014 மற்றும் 2024 என 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கொல்கத்தா அணி ரூ.20 கோடி பரிசை வென்றுள்ளது. 2 ஆம் இடம் பிடித்த ஐதராபாத் அணி ரூ.13 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287 ரன்கள்) அடித்து சாதனை படைத்திருந்த ஐதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைவான (113 ரன்கள்) ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்தது கவனிக்கத்தக்கது.