இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் அரைசதமும், டேனியல் லாரன்ஸ் 46 ரன்களும் அடித்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அக்ஸர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்திலேயே சுப்மன் கில், டக் அவுட்டாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது ஒருபக்கம் ரோகித் நிதானமாக ஆட, மறுபுறம் விக்கெட்டுகள் விழத்தொடங்கின. புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய கேப்டன் விராட் கோலி, டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சிறிது நேரம் நிலைத்து நின்ற ரஹானே 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவெளியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 106 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.