இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (07.07.2024) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கியுள்ளார்.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் சதம் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே சமயம் தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே முதல் சதத்தை அடித்து அபிஷேக் சர்மா ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார்.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் விளாசி அசத்தியுள்ளனர். இந்திய அணியின் அதிரடி பேட்டிங் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.