16 ஆவது சீசன் ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 10 ஆவது லீக் போட்டியில் லக்னோ அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அன்மொல்ப்ரீத் சிங் நிலையான ஆட்டத்தை கொடுக்க மறுபுறம் மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த ராகுல் திரிபாதி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க அன்மோல் ப்ரீத் சிங் 31 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்த வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய லக்னோ அணியில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்களையும் அமித் மிஷ்ரா 2 விக்கெட்களையும் யஷ் தாக்கூர், ரவி பிஸ்னோய் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
122 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் அதிரடி ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் கே.எல்.ராகுல் நிலையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் அசத்திய க்ருணால் பாண்டியா பேட்டிங்கிலும் நிலையான ஆட்டத்தை கொடுத்தார். 23 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். லக்னோ அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 127 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் ஆதில் ரஷித் 2 விக்கெட்களையும் உம்ரான் மாலிக், ஃபரூக், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.