ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.
பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.
பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.
பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவுக்கு மட்டும் மற்ற அணிகளின் வெற்றியைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே மீதமிருக்கும் போட்டிகளை வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.