இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், நடந்து முடிந்த இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், 40வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ராகுல் டிராவிட் மகனிடம் இருந்துவந்த தொலைபேசி அழைப்பே, ட்ராவிட்டை தலைமை பயிற்சியாளராக்க காரணம் என நகைச்சுவையாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கங்குலி, "டிராவிட் மகனிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. அப்போது அவன், தன்னுடைய அப்பா தன்னிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வதாகவும், அவரை தன்னிடமிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அப்போதுதான் ராகுலை (டிராவிட்) அழைத்து, தேசிய அணியில் சேர்வதற்கான நேரம் இது என கூறினேன்" என நகைச்சுவையாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். ஒரே நேரத்தில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கினோம், பெரும்பாலான நேரத்தை ஒன்றாக விளையாடுவதில் செலவழித்தோம். அவர் இந்த விளையாட்டின் மிகப்பெரிய தூதர்" எனவும் கங்குலி தெரிவித்தார்.