Skip to main content

ரசிகர்கள் கொண்டாடும் தோனி ரிவியூவ் சிஸ்டம்! 

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
Dhoni

 

 

 

டி.ஆர்.எஸ். எனப்படும் நடுவரின் முடிவுக்கு எதிரான, அப்பீல் முறையை கிரிக்கெட்டில் அறிமுகம் செய்தபோது அதை எதிர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. நடுவரின் முடிவுக்கு போதுமான மதிப்பு கிடைப்பதை உறுதிசெய்யவே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். 
 

 

 

உலக நாடுகள் பலவும் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தினாலும், இந்தியா விளையாடும் போட்டிகளில் மட்டும் அது பயன்படுத்தப் படவில்லை. இந்நிலையில், இந்திய கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பிறகு, ரிவியூவ் சிஸ்டத்தை இந்திய அணி பயன்படுத்தும் என அறிவித்தார். அது பல சமயங்களில் அணிக்கு பலம் சேர்க்கும் என்பதால், இந்த முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது. அதேசமயம், ரிவியூவ் சிஸ்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த தோனி, அது அனுமதிக்கப்பட்ட பிறகு, அதிலும் தன் தனித்துவத்தைக் காட்டத் தொடங்கினார். தோனி ரிவியூவ் கேட்கச் சொன்னால் அது கண்டிப்பாக அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்தும், தோனி ரிவியூவ் சிஸ்டம் என்ற பெயரும் இந்திய ரசிகர்களுக்கு பரிட்சயமானது. 
 

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மீண்டும் அது நிரூபணமாகி இருக்கிறது. போட்டியின் 8-வது ஓவரின் இறுதிப்பந்தை வீசிய யஸ்வேந்திர சகால், பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல்-ஹக் பேடில் பந்து பட்டதும் எல்.பி.டபில்யூ அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. சகால் நிச்சயம் இது விக்கெட்தான் எனச் சொல்ல, கேப்டன் ரோகித் சர்மா தோனியைப் பார்த்தார். தோனி உடனடியாக தன் தலையை ஆமாம் என்று ஆட்ட, ரிவியூவ் கேட்கப்பட்டது. அதில், இமாம் அவுட் என்று காட்டியதும், வர்ணனையாளர்கள் பெட்டியில் இருந்த கவாஸ்கர், “தோனிதான் இந்த விக்கெட் கிடைக்கக் காரணம்” என அழுந்தச் சொன்னார். ட்விட்டர்வாசிகளும் தோனி ரிவியூவ் சிஸ்டம் குறித்து பாராட்டி வருகின்றனர்.