கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரம் யோகிபாபுவும் இவ்விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தினேஷ் கார்த்திக், “இங்கு வந்துள்ளது மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக விளையாடும் போது தான் அவரை பார்த்தேன். அவரது கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடராஜனுக்கு யாரெல்லாம் உதவியுள்ளார்களோ அவர்கள் யாரையும் மறக்கமாட்டார்.
முதன் முதலில் சிறிய ஊரில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்தவர் எம்.எஸ்.தோனி. அவர் தான் எடுத்துக்காட்டு. சிறிய ஊரில் இருந்து வந்து பெரிதாக சாதிக்க முடியும் என காட்டியவர் அவர் தான். இன்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்த நிறம் மஞ்சள் என்றால் அதற்கு அவர் தான் காரணம். நடராஜனைப் பற்றி மேத்யூ ஹைடனும், ரிக்கி பாண்டிங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கேட்கிறார்கள். அவர் ஏன் ஐபிஎல் முடிந்து இந்திய அணிக்காக ஆடவில்லை என கேட்கிறார்கள். அந்த அளவிற்கு நடராஜன் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்தனை நாட்கள் ஆடியும் நடராஜனை அதிகமானோர் ஞாபகம் வைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருந்தும் வேறு ஊர்களில் இருந்து வந்தெல்லாம் கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். ஆனால் புதிதாக மைதானத்தை கட்டி என் ஊரில் இருந்து அதிகமானோர் விளையாட வரவேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம் அதை அவர் நிஜமாக்கி காட்டியுள்ளார். நானும் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இம்மாதிரியான சிந்தனை எனக்கு வந்ததே இல்லை” எனக் கூறினார்.