16 ஆவது ஐபிஎல் சீசனின் 11 ஆவது லீக் போட்டி கவுஹாத்தியில் உள்ள பர்சாபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஜெய்ஸ்வாலும் பட்லரும் டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 60 ரன்களுடனும் பட்லர் 51 பந்துகளில் 79 ரன்களையும் குவித்தனர். இதன் பின் வந்த கேப்டன் சாம்சன் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற இன்னிங்ஸின் இறுதியில் ஹெட்மயர் 21 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 199 ரன்களை குவித்தது.
200 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற கேப்டன் வார்னர் நிதானமாக ஆடி 65 ரன்களை எடுத்தார். பின் வந்த வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியில் போல்ட் 3 விக்கெட்களையும் சாஹல் 3 விக்கெட்களையும் அஷ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் மூலம் வார்னர் ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 6000 ரன்களை எடுக்க 165 இன்னிங்ஸ்களை அவர் எடுத்துக்கொண்டுள்ளார். அதேபோல் 6000 ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.