“அந்த பையனுக்கு பயம் இல்ல”
தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர்கள் பெரும்பாலும் ஐ.பி.எல் தொடரில் தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தியவர்கள் தான். தற்போது நடந்து கொண்டிருக்கும் டாடா ஐ.பி.எல் -2023 நடப்பு தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவ்வணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங் என்ற இளம் வீரர் தனது அசாத்திய திறமையை வெளிக்காட்டி கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்து 30 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் போற்றும் கிரிக்கெட் வீரர் தோனி, பெங்களூர் அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் கடைசி ஓவரில் 24 ரன்கள் அடித்திருந்த சாதனையை முறியடித்தார் இளம் வீரர் ரிங்கு சிங். நாடு முழுவதும் தற்போது மீம்ஸ் மூலமாகவும் தனிப்பட்ட முறையில் பெரிய கிரிக்கெட் ஜாம்பாவான்களும் ரிங்கு சிங்கை புகழ்ந்து வருகின்றனர்.
“யாரு சாமி நீ இவ்ளோ நாள் எங்க இருந்த?”
உத்திரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள சிலிண்டர் விற்கும் தந்தைக்கு 5-வது குழந்தையாக பிறந்தவர் ரிங்கு சிங். தந்தைக்கு உதவியாக அவ்வப்போது அவரும் வீடு வீடாகச் சென்று சிலிண்டர் போட்டுள்ளார். வேலை இல்லாத நேரம் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை விளையாடுவார்.
“ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”
ரிங்கு சிங் தனது 16 வயதில் உத்திரப் பிரதேசத்திற்காக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் அந்தப் போட்டியில் 83 ரன்களுடன் அதிக ஸ்கோரைப் பெற்றார் . நவம்பர் 2016 - 2017 ஆம் ஆண்டு நடத்த ரஞ்சி டிராபில் உத்திரப் பிரதேச மாநிலத்திற்காக 10 போட்டிகள் விளையாடி 953 ரன்கள் எடுத்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
“நட்புன்னா என்னன்னு தெரியுமா?”
என்னதான் ஒரு பக்கம் ரிங்கு சிங் கிரிக்கெட்ல ரன் அடித்தாலும் அன்றாட வாழ்க்கையை ரன் பண்ண பணம் தேவைப்பட்டது. அதற்காக அவர் துப்புரவு தொழிலை செய்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். உத்திரப் பிரதேச அணிக்காக ரஞ்சி டிராபியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னாவின் தலைமையில் விளையாடி அவரின் நட்பை சம்பாதித்தார் ரிங்கு சிங். ரெய்னாவும் அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தேவையான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
“நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டான்”
தனது விடா முயற்சியால் 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றார் ரிங்கு சிங். பிறகு 2018ல் கொல்கத்தா அணி இவரை 80 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது. நிறைய சீனியர் வீரர்கள் அணியில் இருப்பதன் காரணமாக பிளேயிங் 11ல் இடம்பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு அபுதாபியில் நடந்த ரம்ஜான் டி20 போட்டியில் விளையாடுவதற்கு முன் அனுமதி பெறாமல் பங்கேற்றதால் ரிங்கு சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று மாதம் இடை நீக்கம் வழங்கியது.
“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”
2022ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த ரிங்கு சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஒரு லட்சம் காசோலையுடன் தனது முதல் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதற்குப் பிறகு இந்தாண்டு நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு மட்டுமின்றி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
“காத்திருப்போம்”
ஐ.பி.எல் தொடர் மூலம் இந்தியா மட்டுமின்றி பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி அவர்களின் தாய்நாட்டிற்கு விளையாடி சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனை புரியட்டும்.
- காலேப் கீர்த்தி தாஸ்