Skip to main content

சமநிலையில் இருக்கும் கேப்டன் vs வைஸ் கேப்டன்... முன்னேறப்போவது யார்..? ஐ.பி.எல். போட்டி #31

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
IPL

ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் அணிகளின் பட்டியலில் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் எப்போதும் இடம் உண்டு. அது என்னவோ பெங்களூரு அணி எவ்வுளவு தான் முட்டி மோதினாலும் அவர்களுக்கு கோப்பை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால் மும்பையை பொறுத்த வரை என்னதான் ஆரம்ப லீக் ஆட்டங்களில் சொதப்பினாலும் இறுதி கட்ட ஆட்டங்களில் இருக்க பிடித்து தொடர் வெற்றிகள் மூலம் கோப்பையை கை பற்றி விடுகிறது. இப்படி இருவேறு முனைகளில் உள்ள அணிகளுக்கும் இந்த ஆண்டு 11வது ஐபில் போட்டிகளில் எதிர்பார்த்தது போலவே அரங்கேறி வருகிறது.

மும்பை அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றியும். பெங்களூரு அணியும் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றியும் பெற்று சமநிலை வகிக்கின்றன. ஏற்கனவே மும்பை, பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய 1வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. என்னதான் பெங்களூரு அணி பேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்தாலும் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் எப்போதும் போல சொதப்பி வருகிறது. கடந்த இரண்டு ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

 

மும்பையை பொறுத்தவரை எப்போதும் போல தோல்விகளிலேயே இந்த ஐபில் சீசனை ஆரம்பித்துள்ளது. இருந்தும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் மூலம் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், ஆகியோர் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளனர். இதனால் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் நோக்கில் நம்பிக்கையுடன் களம் காணும். மேலும் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் இனி வரும் ஆட்டங்களில் 7ல் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும் என்பதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

பெங்களூருவின் தூண்களாக திகழும் கோலியும், டிவில்லியர்ஸும் நல்ல பார்மில் உள்ளனர். காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் களம் திரும்ப வாய்ப்புள்ளதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அது அமையும். மேலும் முந்தய லீக் ஆட்டத்தில் மும்பையிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அண தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஜெயிக்க போவது இந்திய அணியின் கேப்டனா...? அல்லது துணை கேப்டனா...? பொறுத்திருந்து பாப்போம்.