Skip to main content

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சோயிப் மாலிக்!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
malik

 

 

 

உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு முறையும் அந்த விமர்சனங்களைக் கடந்தே அந்த அணி முன்னேறி வருகிறது. 
 

துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட், டி20 தொடர்களிலும் அந்த அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் முதல் போட்டி ட்ராவில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேபோல், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் துபாயில் மோதவுள்ளது. 
 

 

 

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக். உலகளாவிய அளவில் தனக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். இவர் கடைசி டி20 போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும், உலக டி20 வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்தார். 
 

இதையடுத்து, தனது அணியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், அணித்தலைமை, காம்பினேஷன், உடல்தகுதி, சுழற்சி முறைக் கொள்கை என பலவற்றிலும் எங்களை நோக்கி கேள்வியெழுப்பும் மீடியா/மக்களுக்கு.. எனக்கூறி இதுவரை பெற்ற வெற்றிகளைப் பட்டியலிட்டதோடு, அணியில் உள்ள ஒவ்வொரு நபரை எண்ணியும் நான் பெருமை கொள்கிறேன்  என பதிவிட்டுள்ளார். 
 

Next Story

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
An ICC trophy again; The continued dominance of the yellow army!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில் வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று  ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.