இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். சமீபத்தில் சச்சின் தெண்டுல்கரின் அதிவேக பத்தாயிரம் ரன்கள் சாதனையை அவர் முறியடித்தார். இது உலக அரங்கில் சச்சின் தெண்டுல்கர் - விராட் கோலி ஒப்பீட்டை மீண்டும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ப்ரெயின் லாரா விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி களத்தில் என்ன செய்தாலும் அது புதிய சாதனையாகவே மாறிவிடுகிறது. அவரது ரன் குவிக்கும் முறை, உடல்தகுதி மற்றும் விளையாட்டுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் என எல்லாவற்றையும் பார்க்கையில், இந்த விளையாட்டுக்கு ஒரு மாபெரும் வீரர் கிடைத்துவிட்டார் என்றே உணரச்செய்கிறது. மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சச்சின் - கோலி ஒப்பீடு குறித்து கேட்கப்படுகையில், என்னையும் சச்சினையும் கூட ஒப்பிட்டு பல செய்திகள் வெளியாகின. ஆனால், நாங்கள் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கோலியும் இதற்குக் கொடுக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது. அவரே சாதனை புரிகிறார் என கூறியுள்ளார்.