82 வயதான பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெருங்குடலில் புற்று நோய்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீலே அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பீலேவின் உடல் திடீரென மோசமடைந்தது. இதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலே சிகிச்சை பலனளிக்காமல் தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பீலே மரணமடைந்ததை அவரது மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் பீலேவின் இறுதிச் சடங்கு பிரேசிலில் அவரது சொந்த ஊரான சாண்டோஸில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்டோஸில் வரும் திங்கள் காலை 10 மணி முதல் மற்றும் செவ்வாய் காலை 10 மணிவரை பீலேவின் இறுதிச் சடங்கு நடைபெறும். சாண்டோஸில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பலமுறை எதிரணியை திணறவைத்து நாயகனாக விளங்கிய பீலேவின் உடல் அதே மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
மேலும் அவரது பூதவுடல் சாண்டோஸிலேயே புதைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.