உலகக் கோப்பை 2023 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் அடுத்த மூன்று இடங்களுக்கு ஐந்து அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நெதர்லாந்து உடனான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நெதர்லாந்து அணி உடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா,நியூசிலாந்து,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் அணியும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெறும் புள்ளிகளை பொறுத்து தகுதி பெறும்.
முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளதால், அதனை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- வெ.அருண்குமார்