Skip to main content

மருத்துவமனையில் கங்குலி! - முதல்வர், ஆளுநர் நேரில் சந்திப்பு..

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

ganguly

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கங்குலிக்கு தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றுள்ளது. கங்குலியின் இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், அடுத்த 24 மணி நேரத்திற்கு கங்குலி கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வரும், ஆளுநரும் கங்குலியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்து மேற்கு வங்க ஆளுநர், "நான் தாதாவுடன் உரையாடினேன். அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். நான் பெரிதும் நிம்மதியடைந்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

மேலும் கங்குலியை நேரில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "அவர் (சவுரவ் கங்குலி) இப்போது நன்றாக இருக்கிறார், அவர் என்னிடம் கூட பேசினார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இங்குள்ள மருத்துவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 


  

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

மம்தாவின் '10 மணி அறிவிப்பு' - பதறிய பாஜக

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
BJP criticizes Mamata's '10 o'clock announcement'

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், 'ஏப்ரல், 2024 முதல், எங்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக  ஒவ்வொரு மாதமும் ரூ.750, மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அரசியல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அதனை திசைதிருப்ப மம்தா மேற்கொண்ட நூதன யுக்தி என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.