இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை வென்றிருந்தாலும் அதன்பிறகு இந்திய அணிக்கு சாதகமாக எதுவுமே நடக்கவில்லை. ஒருநாள் தொடரை இழந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் டெஸ்ட் தொடரையும் இழக்க வேண்டி வரும் என்பதால், இந்திய அணி கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அணித் தேர்வில் நடைபெற்ற குழப்பம்தான் முக்கியக் காரணம் என கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகத் தெரிவித்தார். இத்தனைக்கு அந்நிய மண்ணில் அனுபவமுள்ள வீரர்கள்தான் என்றாலும், இங்கிலாந்தில் ஏனோ இந்திய வீரர்கள் பேசும்படியாக எதையும் நகர்த்தவில்லை.
இதுவொருபுறம் இருக்க, நாட்டிங்காமில் நடக்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, முதல் இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து இந்திய அணியை மீட்டுவருமா என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. ஆனால், விராட் கோலி முன்னர் சொன்னதுபோல் அணித்தேர்வில் இந்த முறை கவனம் செலுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் சொதப்பிய மூன்று வீரர்களை மூன்றாவது போட்டியில் பெவிலியனில் உட்கார வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முரளி விஜய், அஜிங்க்யா ரஹானே மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்கலாம். அதேபோல், அவர்கள் இடத்தை நிரப்ப கருண் நாயர், ரிஷப் பாண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ரிஷப் பாண்ட் மிகச்சிறப்பாக ஆடியதால், அவரை நிச்சயம் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.