Skip to main content

மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிப்போம் - ஹோமியோபதி டாக்டர் ஆர்த்தி விளக்கம்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

 homeopathy medicine and treatment

 

பல்வேறு மருத்துவ முறைகள் இயங்கி வரும் நாடு இந்தியா. ஆங்கில மருத்துவம் என்று சொல்லப்படும் அலோபதி மருத்துவ முறையை நம்மில் அதிகமானோர் பயன்படுத்தி வந்தாலும், பிற மருத்துவ முறைகளின் மீதான ஆர்வமும் இங்கு பலருக்கு இருக்கிறது. அந்த வகையில் ஹோமியோபதி மருத்துவம் குறித்த பல்வேறு தகவல்களை ஹோமியோபதி டாக்டர் ஆர்த்தி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஹோமியோபதி என்பது ஒரு மாற்று மருத்துவ முறை. அந்தக் காலத்தில் நோய்களை குணப்படுத்த கோரமான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளே இல்லாத சூழ்நிலையும் இருந்தது. இதனால் வெறுப்பு கொண்ட எங்களுடைய நிறுவனர் டாக்டர் சாமுவேல் அவர்கள் மருத்துவப் பணியை விட்டுவிட்டு மொழிபெயர்ப்பு செய்யும் பணிக்கு சென்றார். அப்போது அவர் ஒரு புத்தகத்தை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும்போது, சின்கோனா மரப்பட்டை மலேரியாவை குணப்படுத்தும் என்று அதில் இருந்தது. 

 

அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக மரப்பட்டையை அவர் சாப்பிட்டார். அப்போது மலேரியா குணமாவதற்கான அறிகுறிகள் அவருக்குத் தோன்றின. இப்படி ஒவ்வொன்றாக அறிந்துகொண்டு அதன் பிறகு தோன்றியது தான் ஹோமியோபதி மருத்துவம். ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அலோபதி மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஹோமியோபதி மருந்துகள் 70 சதவீதம் செடிகளின் மூலமாகவே தயாரிக்கப்படுகின்றன. 30 சதவீத மருந்துகள் விலங்குகளிலிருந்தும் கனிமங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன.

 

ஹோமியோபதி மருந்துகள் பெரும்பாலும் இனிப்பாக இருக்கும். 4000க்கும் அதிகமான மருந்துகள் ஹோமியோபதியில் இருக்கின்றன. தற்போது மத்திய அரசின் ஊக்குவிப்பும் எங்களுக்கு அதிகம் இருக்கிறது. புதிது புதிதாக ஹோமியோபதி மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஹோமியோபதியில் மட்டும் தான் மருந்துகளை மனிதர்களுக்குக் கொடுத்து நிரூபிக்கிறோம். மற்ற மருத்துவ முறைகளில் விலங்குகளுக்கு தான் முதலில் கொடுப்பார்கள். நோயாளியின் மனதைப் படித்து நாங்கள் மருத்துவம் செய்கிறோம்.

 

ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் எந்த ஒரு நோயும் மனதையும் பாதிக்கும். எனவே நோயாளிகளிடம் பேசி, அவர்களின் பிரச்சனைகளை முழுமையாக அறிந்து நாங்கள் சிகிச்சை வழங்குகிறோம். ஹோமியோபதி மிகவும் தாமதமான ஒரு சிகிச்சை முறை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதில் உண்மையில்லை. நோயின் கால அளவைப் பொறுத்தே குணமாகும் கால அளவும் இருக்கும். ஹோமியோபதி மருந்துகளால் பின்விளைவு ஏதும் இருக்காது. ஹோமியோபதி சிகிச்சையின் அடிப்படை நிரந்தரமான தீர்வு கொடுப்பதே ஆகும்.