Skip to main content

தன்னைப் பற்றிய அதீத கற்பனை கூட மனநோயாகுமா? - மனநல மருத்துவர் புனிதவதி விளக்கம்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dr Punithavathi | Psychiatrist |

 

மனநோய் குறித்த பல்வேறு தகவல்களை மனநல மருத்துவர் புனிதவதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மனநோய் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒன்றுதான். இவ்வளவு அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகும் மூளை குறித்த மிகச் சில விஷயங்களைத் தான் இதுவரை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். மனநல மருத்துவம் என்பது இப்போது தான் வளர்ந்து வருகிறது. மனநோய் என்றாலே பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள் என்கிற அச்சத்தில் பலர் மருத்துவமனைக்கு வருவதையே தவிர்க்கின்றனர். மனநல மருத்துவமனைக்கு செல்லச் சொன்னால் பொதுவாக அனைவருக்கும் கோபம் தான் வருகிறது. 

 

மனநோய்கள் குறித்தும் அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்தும் தெரிந்துகொள்வதில் ஒரு பெரிய தயக்கம் இங்கு இருக்கிறது. சாதாரணமாக அனைவரையும் போல் இருப்பவர்கள், மனச்சிதைவு நோய் ஏற்பட்டவுடன் பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். மூளையில் ரசாயன மாற்றங்கள் நடக்கும்போது நம்முடைய வேலைகளை நம்மால் இயல்பாகச் செய்ய முடியாது. மரபணு மூலமாகவும் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படலாம். 20 வயதிலிருந்து கூட இந்தப் பிரச்சனை ஏற்படலாம். 

 

என்னிடம் ஒரு நோயாளி வந்தார். அவர் ஒரு எம்என்சி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அந்த காலகட்டத்தில் ஆறு மாதமாக வேலைக்குச் செல்லவில்லை என்று கூறினார். தனக்கு நிறைய பதற்றமும் பயமும் வருவதாக அவர் கூறினார். அலுவலகத்திலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தன்னைப் பற்றி மேனேஜரிடம் தவறாக சிலர் சொல்வதாக அவர் கூறினார். இந்த விஷயங்களைக் கூட அவரால் என்னிடம் கோர்வையாக சொல்ல முடியவில்லை. அவரிடம் தொடர்ந்து ஒரு பதற்றம் இருந்தது.

 

தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு இருக்காது. எனவே அவர்களோடு இருப்பவர்கள் தான் அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். தன்னைப் பற்றி வெளியே இருப்பவர்கள் தவறாகப் பேசுகிறார்கள் என்று அவர் நினைத்தார். அடுத்த முறை நான் அவரை சந்திக்கும்போது, தனக்கு ஒரு அதீத சக்தி இருக்கிறது என்று அவர் கூறினார். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தான் ஈழ மக்களைக் காப்பாற்ற வந்தவன் என்று அவர் கூறினார். அதனால்தான் அனைவரும் தன்னை டார்கெட் செய்கின்றனர் என்றும் அவர் கூறினார். இப்படியான மனநிலையால் ஆறு மாத காலமாக வீட்டை விட்டே வெளியே வராமல் இருந்தார். இப்போது வரை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.