Skip to main content

உறவுகளை சேர்த்துவைக்கும் 'உமையொருபாகன்' !

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

the one who brings relationships together

 

பண்டைக் காலந்தொட்டு தமிழகம் இறை வழிபாட்டில் சிறந்து விளங்கிவருவதை நாமறிவோம். இறைவனின் அருள் பெற்று எல்லா நலமும் கிடைக்க எண்ணற்ற ஆலயங்களை எழுப்பி, வழிபாட்டு முறைகளைச் செவ்வனே செய்து, அதனைப் போற்றிப் பாதுகாத்து வருவதில் தமிழகம் தனியிடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல. அப்படி இறைவன் கோவில் கொண்டு அருளாட்சி செய்யுமிடங்களில் கொங்கு நாட்டிலுள்ள திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்னும் திருச்செங்கோடும் ஒன்று. இங்கு அர்த்த நாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டு வேலவர் ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்து, பக்தர்களின் துயர் நீக்கி வாழ்வை வளம்பெறச் செய்து வருகிறார்கள்.

 

செந்நிறமான திருச்செங்கோடு மலையை "கொண்டல், நெடும்புரிசை, கொடி மாடச் செங்குன்றூர்' என சேக்கிழார் பாடியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தரனுபூதி - அலங்காரம் ஆகிய நுல்களில் இக்கோவிலைப் போற்றி எழுதப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது.

 

இத்தகைய பெருமை பெற்ற இங்குதான் எம்பெருமான் பார்வதிக்குத் தனது உடலில் இட பாகத்தைக் கொடுத்தார். ஆம்; முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு கயிலையை விட்டுச் சென்ற நிலையில், மகனின் பிரிவுத்துயர் தாங்காமல் வருந்திய பார்வதியைக் கண்டு துயருற்ற சிவபெருமான், அன்னையை அருகேயுள்ள பசுமையான சோலைக்கு அழைத்துச்சென்றார். அங்கே ஒரு மாமரத்தில் முல்லைக்கொடி படர்ந்திருந்ததை இறைவன் சுட்டிக்காட்டினார். மாமரத்தைத் தலைவனாகவும், முல்லைக் கொடியைத் தலைவியாகவும் எண்ணி வெட்கம் மேலிட்ட தேவி இறைவனின் இரு கண்களையும் மூடினாள். இதனால் உலக இயக்கம் நின்றுபோனது. தேவர்களும் முனிவர்களும் செயலிழந்தனர்.

 

உயிரினங்கள் மயங்கி நின்றன. காற்று நின்றது. அனைத்துலகும் ஸ்தம்பித்ததைக் கண்ட தேவி, இறைவனின் கண்களிலிருந்து கைகளை விலக்கினாள். அதன் பிறகே உலகம் இயங்கியது. இதனிடையே ஏற்பட்ட தீங்கு பற்றி தேவர்கள், முனிவர்கள் இறைவனிடம் ஓடிவந்து முறையிட்டனர். அப்போது இறைவன் அன்னையிடம், "என் கண்களை மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. இதனால் படைப்புத் தொழில் உட்பட அனைத்தும் முடங்கியதால் உண்டான பாவம் உம்மையே சேரும். எனவே அதைப் போக்க கேதாரத்திலும், அடுத்து காசியிலும், அதையடுத்து காஞ்சியிலும் எம்மை நோக்கித்தவம் மேற்கொள்ள வேண்டும். காஞ்சியில் உமக்குக் காட்சியளித்து பாவவிமோசனம் அளிப்போம்'' என்று ஆலோசனை சொல்ல, அதன்படியே அன்னை மூன்று இடங்களிலும் தவமிருந்து, இறுதியில் காஞ்சியில் கம்பை ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து தவம் செய்தாள்.

 

அப்போது கம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, அன்னை வழிபட்ட சிவலிங்கத்தை வெள்ளம் சூழ, அன்னை லிங்கத்தைக் கட்டித் தழுவினாள். இதைக்கண்ட சிவபெருமான் அங்கே தோன்றி, "உனது பாவம் நீங்கியது. என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். அதற்கு அன்னை, "இப்போது போலவே நாம் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அதன் பொருட்டு உங்களது உடலில் இடபாகத்தை எமக்குத் தந்தருள வேண்டும்'' எனக் கேட்டாள்.

 

சிவபெருமான், "தேவி, எனது கண்களை மூடிய பாவத்தை இங்கு போக்கினாய். உமது இந்தக் கோரிக்கை நிறைவேறவேண்டுமானால் கொங்கு மண்டலத்திலுள்ள நாகாசாலம் மலையில் (திருச்செங்கோடு) சென்று எம்மை வேண்டித் தவம் செய்வாயாக. அங்கே உமது விருப்பம் நிறைவேறும்'' என்றார். அதன்படியே அன்னை இம்மலைக்கு வந்து சேர்ந்தாள். அன்னை வருகையை அறிந்து விநாயகர், முருகன், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் எதிர்சென்று வரவேற்றனர். புரட்டாசித் திங்கள், வளர்பிறை அட்டமித் திதியில், அன்னை இம்மலையில் சிவனை வேண்டி கேதாரகௌரி விரதத்தை மேற்கொண்டாள். இதைக்கண்டு மனம் மகிழ்ந்த கருணைக்கடலாகிய எம்பெருமான் புரட்டாசித் திங்கள், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் எதிரே காட்சி கொடுத்து, அன்னைக்கு இடபாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார்.

 

சிவனும் சக்தியும் ஒன்றாகி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தலம் இதுவே.

 

இங்கு சிவலிங்கம் இல்லை. மூலவரே அர்த்தநாரீஸ்வரராக ஆண் பாதி, பெண் பாதியாக உள்ளார். வலப் பக்கம் எம்பெருமானுக்குரிய உடையும், இடப்பக்கம் அம்பாளுக்குரிய ஆடையும் என நின்ற கோலத்திலுள்ள காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும். கொங்கு நாட்டிலுள்ள குடும்பத்தினர் பெரும்பான்மையினர் தங்கள் குடும்பங்களில் நடக்கும் திருமணங்கள் எங்கு நடந்தாலும், திருமணம் முடிந்த கையோடு, இவ்வாலய சிவசக்தி முன்பு வந்து அர்ச்சனை செய்து, மணமக்கள் மாலை மாற்றி திருமணச்சடங்கை இறுதி செய்த பிறகே வாழ்வைத் தொடங்குகிறார்கள். மேலும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ள தம்பதிகளில் யாராவது ஒருவரோ, இருவருமோ இங்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து சென்றால், முரண்பாடுகள் தீர்ந்து இணைந்து வாழ்கிறார்கள்.

 

திருஞானசம்பந்தர் இவ்வாலய இறைவனை தரிசிக்க வந்து சில காலம் இங்கேயே தங்கினார். அப்போது இப்பகுதி மக்களை விஷ ஜுரம் தாக்கியது. அந்த ஜுரம் திருஞானசம்பந்தரையும் தாக்கியது. இதனால் துன்புற்ற ஞானசம்பந்தர் இறைவனிடம், "அவ்வினை இவ்வினை' எனத் தொடங்கும் பதிகங்களைப் பாடினார். இதனையடுத்து மக்களை வாட்டிய விஷ ஜுரம் நீங்கியது. எனவே, நீண்ட நாள் நோயால் துன்புறுபவர்கள் இவ்வாலய இறைவனையும், இறைவியையும் வணங்கி நோய் நீங்கப் பெற்று வளமுடன் வாழ்கிறார்கள்.

 

மலைக்குப் போகும் வழியில் கோவிலை அடைய 1,200 படிக்கட்டுகள் உள்ளன. (வாகனங்களில் செல்ல சாலை வசதியும் உண்டு.) இதன் வழியே ஏறிப்போகும் போது 60-ஆவது படிக்கட்டு அருகே ஆதிசேடனின் ஐந்து தலைகளும் படமெடுத்தபடி வளைந்து நெளிந்திருக்க, படத்தினுள்ளே சிவலிங்கம் உள்ளது பார்ப்போரை வியக்க வைக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம். மலை மீதும் ஆதிசேடன் அருள் பாலிக்கிறார்.மலையில் கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னி தீர்த்தம் முதலான தீர்த்தங்கள் உள்ளன.

 

மலையை தொலைவில் நின்று பார்த்தால் செந்நிறமாகத் தோன்றும். மலையிலுள்ள தீர்த்தங்களிலிருந்து நீர் வழிந்தபடியே இருக்கும். மூலவர் அர்த்த நாரீஸ்வரர் பாதங்களில் இருந்தும் நீர் கசிந்துகொண்டே இருக்கும். அது பக்தர்களுக்கு தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது. இவ்வாலய இறைவன் ஊமையைப் பேச வைத்த உண்மைச் சம்பவம் ஒன்றும் உண்டு. கொங்கு மண்டலத்திலுள்ள காடையாம்பட்டியைச் சேர்ந்த பக்தர் பாததூளி. இவரது மனைவி சுந்தரம். இத்தம்பதிக்கு நீண்டகாலமாக மகப்பேறில்லாமல் வேதனைப்பட்டனர்.

 

ஆன்றோர்கள் அறிவுரையின்படி இவ்வாலய இறைவனைத் தேடி வந்து வழிபட்டனர். இறைவனின் திருவருளால் அத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனுக்கு உமையொருபாகன் என்று பெயரிட்டு வளர்த்தனர். ஆனால் அந்தக் குழந்தையோ வாய் பேச முடியாத ஊமையாக இருந்தான். அதனால் தம்பதிகள் வேதனைப்பட்டனர். அம்மையப்பன் கொடுத்த குழந்தையை அவனிடமே ஒப்படைத்து விடுவதென முடிவெடுத்து இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது வைகாசி விசாகம். அன்று இறைவனின் தேரோட்டம் நடந்தது. தம்பதிகள் குழந்தையைத் தேர்ச்சக்கரத்தின் கீழே வைத்து விட்டனர்.

 

இதைக்கண்ட அனைவரும் திகைத்து நிற்க, தேரோட்டும் பணியிலிருந்த வேலப்ப பூபதி என்பவர், "அப்பனே ஒப்பிலா மணியே... ஓடும் தேர்ச்சக்கரம் குழந்தை மேல் பாயுமானால் என் தலையை சக்கரத்தில் கொடுப்பேன்' என்று சூளுரைத்தார். என்ன அதிசயம்! வேகமாகச் சென்ற தேர்ச்சக்கரம் அந்த குழந்தையின் தலையைக் கடந்து சென்றது. குழந்தை சிரித்தபடியே எழுந்தது. ஊமையாய் இருந்த அந்தக் குழந்தை மழலை மொழி பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செங்கோட்டு இறைவனின் திருவிளையாடலை எண்ணி உளம் மகிழ்ந்தனர் மக்கள்.

 

"பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் கொங்கு நாட்டில் ஏழாவது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். இவ்வாலய இறைவனுக்கு தேனில் அபிஷேகம் செய்து, அந்தத் தேனை மருந்தாகவும், மருந்துகளில் கலந்தும் சாப்பிட்டால் நோய்கள் பறந்து போகும்'' என்கிறார் இவ்வாலய அர்ச்சகர் விக்னேஸ்வர சிவாச்சாரியார். மேலும் "வைகாசி விசாகப் பெருந்தேர் விழா, புரட்டாசியில் மலைக்கோவில் கேதாரகௌரி விரதம், நவராத்திரி பூஜை, கார்த்திகை தீபம், தைப் படித்திருவிழா, மாசி மகா சிவராத்திரி, மாசி மகம் போன்ற விழாக்கள் மிகச்சிறப்பாக நடக்கின்றன. தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கின்றன. இவரை நாடி வருவோர்க்கு கைமேல் பலன் கிடைக்கும்'' என்கிறார் அர்ச்சகர்.

 

இக்கோவிலில் செங்கோட்டு வேலவனாக முருகன் அருளாட்சி செய்கிறார். இவர் நிகழ்த்திய மெய் சிலிர்க்கும் சம்பவம் உள்ளது என்கிறார்கள் கோவில் அர்ச்சகர்கள். திருச்செங்கோட்டில் பெரும்புலவராக வாழ்ந்தவர் குணசீலன். இவர் குமரனின் தீவிர பக்தர். அப்படிப்பட்டவருக்கு ஒரு சோதனை வந்தது. பாண்டிநாட்டில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள குரூரைச் சேர்ந்த முத்தமிழிலும் வல்லவரான பயங்கரன், தம் புலமையினால் பெரும் செருக்கு கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் இப்பகுதிக்கு வந்தபோது புலவர் குணசீலரைப் பற்றிக் கேள்விப்பட்டு, புலமைப் போட்டிக்கு வருமாறு அறைகூவல் விடுத்தார். இதைக்கேட்டுத் துணுக்குற்ற குணசீலர் வேலவனை வணங்கி முறையிட்டார்.

 

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய செங்கோட்டு வேலவன், "புலவரே, துயரைவிடுக! உம்மைக் காத்தருள்வேன்' என்றான். மறுநாள் புலவர் பயங்கரன் பல்லக்கில் ஏறி மலையின் எல்லைக்கு வந்தார். மலையின் வடிவம் பாம்பின் வடிவம்போல் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். உடனே, "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமெனவமரிற் படம் விரித்தாடாத தென்னை' என்று தம்மையும் மறந்து பாட, அடுத்த அடி பாடும் முன்னே அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், "அகுதாய்ந்திலையோ நமரின் குறவள்ளி பங்கனெழுகரை நாட்டுயர்ந்த குமரன் திருமுருகன் மயில் வாகனம் கொத்துமென்றே' என்று பாடி முடித்தான்.

 

இதைக்கேட்ட பயங்கரன் விக்கித்துப் போனார். கண நேரத்தில் தாம் முடிக்காமல் விட்ட பாட்டை முடித்துப் பாடிய சிறுவனின் புலமை கண்டு வியந்தார். அந்த சிறுவனிடம் "யார் நீ' என்று விசாரிக்க, "குணசீலப் புலவரின் கடைக்கோடி மாணவன் நான்' என்று சொல்ல, கடைக்கோடி மாணவனுக்கே இவ்வளவு புலமையென்றால், குணசீலர் எவ்வளவு புலமைபெற்றவராக இருப்பார் என்று மிரண்டுபோய், வழக்காடுவதை விட்டுவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

 

"விநாயகர், முருகன், சிவன், சக்தி ஆகியோரோடு மகாவிஷ்ணு ஆதிகேசவப் பெருமாளாக கோவில் கொண்டுள்ளார் - பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில். இம்மலை மீது மலடிக்கல் என்றொரு குன்றுள்ளது. அதன்மீது ஏறி சுற்றி வந்து வணங்க, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு'' என்கிறார் பெருமாள் கோவில் மனோஜ் பட்டாச்சாரியார்.

 

"இக்கோவிலுள்ள மலையை ஒரு முறை வலம் வந்தாலே போதும்; மூன்று உலகத்தை வலம் வந்த பலன் கிடைக்கும். இம்மலையை தொலைவிலிருந்து பார்த்தால் ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது போன்றிருக்கும். சிவனும் சக்தியும் இணைந்த மலை என்பதற்கு இது எடுத்துக்காட்டு'' என்கிறார்கள் இவ்வூரைச் சேர்ந்த பக்தர்களான சதீஷ், தினேஷ்குமார், தங்கராசு ஆகியோர்.

 

"இத்தல அர்த்தநாரீஸ்வரர் விவாகரத்து பெற்றுப் பிரிந்து போன தம்பதிகளைக் கூட இணைத்து வைத்து சிறப்போடு வாழ வைத்த உண்மைச் சம்பவங்கள் ஏராளம்' என்கிறார்கள் ஆலய ஊழியர்கள். இத்தல இறைவன் இப்பகுதியிலுள்ள உறவினர்கள், பங்காளிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நீதிமானும்கூட! எதிர் தரப்பினரை அழைத்து வந்து, இவ்வாலயத்தின் படிக்கட்டுகளிலுள்ள குமரப் படிக்கட்டில் நின்று, "சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்ய வேண்டும். பொய்ச்சத்தியம் செய்தவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர்.அதனால் சத்தியவாக்குப் படியில் சத்தியம் செய்து தங்கள் பிரச்சினைகளை மனநிறைவோடு தீர்த்துக் கொள்கிறார்கள் இப்பகுதி மக்கள்.