Skip to main content

எமகண்டம், குளிகை கெட்ட நேரமா? இந்நேரங்களில் என்னென்ன செய்யலாம்? - லால்குடி கோபாலகிருஷ்ணன் கூறும் ஜோதிட சாஸ்திரம் 

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், எமகண்டம், குளிகை கெட்ட நேரமா என்ற தலைப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

எமகண்டம் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் வருகிறது. இது எமனுக்கு ஏற்ற நேரம் என்ற தவறான புரிதலில் எமகண்ட நேரம் கெட்ட நேரமாகவே கருதப்படுகிறது. எமன் வேறு; எமகண்டகன் வேறு.  எமன் என்பவர் சூரியனின் மகன். எமகண்டகன் குருவின் மகன். பெரும்பாலானவர்களுக்கு எமகண்டகன் என்ற உபகண்டம் இருப்பதே தெரியாது. எமன் தெற்கு திசைக்கு காவலாளி. இவ்வாறு தான் ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

 

எமகண்டகன் நல்லதையே செய்வான். அவன் மரணத்தைத் தவிர்க்க கூடிய அமிர்த மந்திரத்தை அறிந்தவன். எமன் மரணத்தை கொடுக்கக்கூடியவன்; எமகண்டகன் மரணத்தை நிறுத்தக்கூடியவன். குளிகை சனியின் மகன். அதனால்தான் சனிக்கிழமை காலையிலேயே முதலில் குளிகை வருகிறது. எமகண்டகன் குரு பகவான் வியாழனின் மகன். அதனால் வியாழக்கிழமை முதலில் எமகண்டம் வருகிறது. எமகண்டகனின் திறன் மற்றும் எண்ணம் குருவைப்போல இருக்கும். குரு எப்போதும் சுபமான விஷயங்களையே செய்வதால் அவரது மகன் எமகண்டகனும் நல்லது செய்வதற்கான அதிகாரங்களை மட்டுமே கொண்டவன். 

 

எல்லா கிரகத்திற்கும் உபகிரகங்கள் உள்ளன. சூரியனுக்கான உபகிரகம் காலன் அல்லது எமன். சந்திரனின் உபகிரகம் பரிவேடன். செவ்வாயின் உபகிரகம் தூமன். புதனின் உபகிரகம் அர்த்தபிரகரணன். குருவின் உபகிரகம் எமகண்டகன். சுக்ரனின் உபகிரகம் இந்திரதனுஸ். ராகுவின் உபகிரகம் வியதீபாதன். கேதுவின் உபகிரகம் தூமகேது. இவைதான் உபகிரகத்தின் வரிசை.

 

பொதுவாக குளிகையில் திருமணம் செய்யமாட்டார்கள். குளிகை நேரத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் திரும்ப திரும்ப நடக்கும். அதனால் ஈமச்சடங்கு போன்ற துன்பம் தரும் காரியங்களுக்கும் குளிகை நேரம் பொருத்தமில்லாத நேரம். அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது ஆகியவற்றையும் குளிகையில் செய்யக்கூடாது. ஆனால், எமகண்டத்தில் புதிய தொழில் தொடங்கலாம், புதிய வங்கி கணக்கு தொடங்கலாம், புதிய நிறுவனத்தை உருவாக்கலாம், ஆடை, ஆபரணங்கள் வாங்கிக்கொள்ளலாம். எமகண்டத்தில் தங்கம் வாங்கினால் வளரும். 

 

ராகு காலத்தின் கடைசி அரைமணி நேரம் அமிர்த ராகு எனப்படும். உங்களுக்கு விரோதிகளால் பல விதமான துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் அமிர்த ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும். எனவே, குளிகையாக இருந்தாலும் எமகண்டமாக இருந்தாலும் ராகு காலமாக இருந்தாலும் எதையும் செய்யவேண்டாம் என்று சொல்லப்படவில்லை. அந்த நேரத்தில் எதைச் செய்தால் நல்லதோ அதைச் செய்தால் நல்லது. எனவே எமகண்டத்தில் புதிய விஷயங்களைச் செய்யலாம். அதற்கும் எமனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

 

காலங்காலமாக எமகண்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அந்த நேரத்தில் எதையும் செய்யக்கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர். ஒரு நாளுக்கு ராகுகாலம், எமகண்டம், குளிகை மொத்தமாக நான்கரை மணிநேரம் வருகிறது. பகலில் நான்கரை மணி நேரம் எந்த வேலையும் செய்யவேண்டாம் என்று பெரியோர்கள் சொல்லியிருப்பார்களா? இதை ஆழமாகச் சிந்தித்து பார்க்கவேண்டும். ஒரு மனிதன் பகலில் நான்கரை மணி நேரத்தை வீணடித்தால் அவன் வாழ்க்கையில் முன்னுக்கு வருவது கடினம். எனவே ராகுவில் என்ன செய்யலாம், குளிகையில் என்ன செய்யலாம், எமகண்டத்தில் என்ன செய்யலாம் என்று வகுத்துக்கொண்டு செய்வதுதான் அறிவுடைமை. ஆகவே எமகண்டத்தில் நல்ல வேலையைச் செய்து பயன்பெறுங்கள்.