அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரில் இசைக் கலைஞராக வலம் வருபவர் ஸெட்டி வில்ஸ். 22 வயதான 2கே கிட் ராப் பாடகரான இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். சாச்சா என்ற ராப் பாடல் மூலம் பிரபலமானதால், ரசிகர்கள் இவரை 'சாச்சா ஸெட்டி' என அழைக்கின்றனர். இவருக்கு டிக்டாக்கில் மட்டும் 67 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் மேலாளராகவும் உள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆஷ்லே, போனி, கேய் மேரி, ஜிலீன் விலா மற்றும் ஐயன்ல கலிஃபா கலெட்டி என்ற 5 பெண்கள் அறிமுகமாகினர். இவர்கள் 5 பேருடனும் டேட்டிங்கில் இருந்த ஜெடி வில், தற்போது அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸெட்டி வில்ஸ் டேட்டிங்கில் இருந்த 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி, ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தினார் எனக் கூறி வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோவை 29 வயது நிறைந்த பாடகியான நியூயார்க் நகரைச் சேர்ந்த 'லிஸ்ஸி ஆஷ்லிக்' என்பவர் வெளியிட்டிருந்தார். இவர், தனது சமூக வலைத் தளத்தில், 'லிட்டில் ஸெட்டி வில்ஸ்சின் 5 குழந்தைகளை வரவேற்கிறோம்' என தலைப்பு குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகமெங்கும் வைரலானது. இதனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடனும் சிலர் ஏக்கத்துடனும் பகிர ஆரம்பித்தனர்.
அதிலும், அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டிருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகவே, நெட்டிசன்கள் பலரும் அந்த வலைத்தள பதிவிற்கு கமென்ட் செய்தனர். அதில், கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் பலரும், ''இது எப்படி சாத்தியம்? இது நம்பும் வகையில் இல்லை.. உங்கள் 5 பேருக்கு இடையே சண்டையே வராதா? எப்படி 5 பெண்களும் பொறாமை மற்றும் கோபம் இல்லாமல் ஒரே நபர் மூலம் கர்ப்பம் அடைந்து, ஒரே இடத்தில் Baby Shower கொண்டாட முடியும்'' எனப் பல கேள்விகளை கேட்டுத் துளைத்து எடுத்தனர்.
இதற்கிடையில், இந்த செய்தியைப் பகிர்ந்த சிலர், 90ஸ் கிட்ஸ்களின் நிலையையும், 2கே கிட்ஸ்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு சிரித்து மகிழ்ந்தனர். இதையடுத்து, 5 பெண்களும் தாய்மை அடைந்ததை பற்றி பதிவில் எழுதிய லிஸ்ஸி, ''நடந்ததை எதையும் மாற்ற முடியாது. எங்கள் 5 பேரின் குழந்தைக்கு அப்பா ஒருவர்தான். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெறுகிறது. 5 பேருடன் பல நேரங்களில் அவர் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டோம். குழந்தைகளுக்கும் இது நல்லதாக இருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும்'' எனக் குறிப்பிட்டு பதிவிட, இப்படி ஒரு குடும்பமா? என நெட்டிசன்களே உலக அளவில் வியந்து பார்த்தனர். அதிலும், இதில் இன்னொரு சுவாரஸ்ய விஷயமாக, அந்த 5 பேரில் இருவருக்கு ஒரே நாளில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, இது போலியானது லைக்கிற்காக செய்த செயல் என சில கருத்துகள் இணையத்தில் வலம் வந்தன.
இந்த நிலையில், வீடியோ வெளியிட்ட பாடகி 'லிஸி ஆஷ்லீக்' திடீரென ஜனவரி 23 ஆம் தேதி புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் கர்ப்பமாக இல்லை எனக்கூறி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து வீடியோவில் பேசிய லிஸி ஆஷ்லீக், ''இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள். இந்த செய்தி வெகுதூரம் சென்றுவிட்டது. இந்த செய்திகள் மற்றும் தொலைக்காட்சி கட்டுரைகளில் உண்மையில்லை. நான் கர்ப்பமாக இல்லை. என் வயிற்றை நீங்களே பாருங்கள். எனது பெயர்களை பின்னாட்களில் கூகுளில் தேடினால் தவறாகத்தானே இந்த செய்திகள் சித்தரிக்கும். நான் கர்ப்பமாக இல்லை. இது ஒரு மியூசிக் வீடியோவுக்காக எடுத்தது, அது பற்றி பேச எனக்கு அனுமதியில்லை. ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம்'' என ஆவேசமாக கூறினார். இந்த திடீர் திருப்பம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.