இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தான் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து கொண்டு ஈட்டிய தொகையை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர். அப்படி வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவது கடந்த 2014ஆம் ஆண்டில் 24.4 சதவீதமாக இருந்தது. அப்போது, இது வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 12.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை 1,400 கோடி டாலர் அதிகரித்து 12,500 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி தனது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் மொத்த பணத் தொகையில், இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் பங்கு 66 சதவீதமாக அதிகரிக்கவிருக்கிறது. அதன்படி, இந்தியர்கள் கிட்டத்தட்ட 10.38 லட்சம் கோடி ரூபாயை தனது தாயகத்துக்கு அனுப்பியுள்ளனர். முந்தைய ஆண்டான 2022ஆம் ஆண்டில் இது 63 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, வெளிநாடுகளில் பணியாற்றி ஈட்டிய தொகையை தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ 2வது இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், வெளிநாடு வாழ் மெக்ஸிகோ நாட்டவர்கள் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகை இந்த ஆண்டில் 6,700 கோடி டாலராக இருக்கும். மேலும், மெக்ஸிகோவை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை சீனா (5,000 கோடி டாலர்), நான்காவது இடத்தை பிலிப்பைன்ஸ் (4,000 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தை எகிப்து (2,400 கோடி டாலர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாட்டில் பணியாற்றி தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.