அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த டிக்டாக் மீதான தடைக்கு, அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளைத் தடை செய்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்களை டிக்டாக் செயலி மூலம் சீனாவின் கம்யூனிச கட்சிகள் உளவு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை தடைக்கான காரணமாக முன்வைத்தார் ட்ரம்ப். டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் இக்குற்றச்சாட்டை மறுத்தது. மேலும், டிக்டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூறி கோரிக்கை வைத்தது. இதை ஏற்கமறுத்த ட்ரம்ப், தடையில் இருந்து தப்ப வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். பைட்டன்ஸ் நிறுவனமும் வேறு வழியில்லாமல் சில அமெரிக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், டிக்டாக் ஆரக்கிள் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவியது. இந்நிலையில், ட்ரம்ப் விதித்திருந்த காலக்கெடு நிறைவடைந்ததால் டிக்டாக் செயலியை புதிதாகத் தரவிறக்கம் செய்வதற்கான தடை அமலுக்கு வந்தது. பைட்டன்ஸ் நிறுவனம் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடியது.
வாஷிங்டன் மாகாண நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிகோலஸ், ட்ரம்ப் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றி விடும் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.