Skip to main content

ஆயுதம் ஏந்தி நாட்டை காக்க பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

russia ukraine

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனின் நகரங்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஏவுகணைகளை ஏவியும், போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் ரஷ்ய ராணுவம் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்து வருகிறது. உக்ரைன் ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரழந்துள்ளதாகவும், இதுவரை தாங்கள் 50 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ளவாத அறிவித்துள்ளார். மேலும் அவர் ஆயுதங்களை ஏந்தி நாட்டை காக்க உக்ரைன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

 

இதற்கிடையே ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளதால், அந்தநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தநிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களை மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்தியர்களை உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லுமாறு தெரிவித்துள்ள இந்திய தூதரகம், பாஸ்போர்ட்டையும், தேவையான ஆவணங்களையும் கூடவே கொண்டுசெல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சூழலில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் அதிருப்தியடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்தியாவிடம் இருந்து அதிக ஆதரவை எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டில் நாங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம். இந்தியாவின் வலுவான குரலுக்காக மன்றாடுகிறோம்.  உங்கள் பிரதமரால் புதினுடனும், எங்கள் அதிபருடனும் பேசமுடியும். வரலாற்றில் பலமுறை, இந்தியா அமைதி காக்கும் பணியை ஆற்றியது. இந்தப் போரை நிறுத்த உங்களின் (இந்திய பிரதமர்) வலுவான குரலை நாங்கள் கோருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்