சி.பி.எஸ். நிறுவனத்தின் வீஜியா ஜியாங் மற்றும் சி.என்.என். நிறுவனத்தின் கைட்லான் காலின்ஸ் ஆகிய இரு பத்திரிகையாளர்களுடனான வாக்குவாதத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பைத் திடீரென முடித்துக்கொண்டார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது சி.பி.எஸ். நியூஸின் வெள்ளை மாளிகையின் நிருபர் வீஜியா ஜியாங், அன்றாடம் அமெரிக்கர்கள் இன்னும் தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் அதிகமான பாதிப்புகளை நாங்கள் காண்கிறோம். ஆனால் இதனை வெறும் உலகளாவிய போட்டியாக மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த டிரம்ப், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி எனவும் கூறினார். ஆனாலும் அந்தப் பெண் செய்தியாளர் "நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?" எனக் கேட்டார். நான் உங்களுக்காக சொல்லவில்லை. இது போன்ற ஒரு மோசமான கேள்வியைக் கேட்கும் எவரிடமும் இதைதான் சொல்வேன் என் ட்ரம்ப் கூறினார்.மீண்டும் பேசிய ஜியாங், "இது ஒரு மோசமான கேள்வி அல்ல" எனக் கூறினார். இதனையடுத்து, சி.என்.என். நிறுவனத்தின் கைட்லான் காலின்ஸ் இதுதொடர்பாக மற்றொரு கேள்வியை எழுப்பினார். ஆனால் அதற்கும் பதிலளிக்காத ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.