ட்ரம்ப் அரசுக்கு எதிராக 'டிக்டாக்' செயலியின் தாய் நிறுவனமான 'பைட்டன்ஸ்' நிறுவனம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ-சாட் செயலிகளைத் தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான இவ்விரு செயலிகளும் அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்களைச் சேகரிக்கின்றன என்றும் அத்தகவல்கள் மூலம் அமெரிக்க மக்களை சீனாவின் கம்யூனிச கட்சிகள் உளவு பார்க்கின்றன என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார் ட்ரம்ப். டிக்டாக் நிறுவனமும் இத்தடையை நீக்குவது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை எடுத்துப் பார்த்தது. இந்நிலையில், செப்டம்பர் 20 -ஆம் தேதி முதல் அமெரிக்காவில், இவ்விரு செயலிகளையும் புதிதாக தரவிறக்கம் செய்ய தடை விதிப்பதாக, நேற்று உத்தரவு வெளியானது. ட்ரம்ப் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், பைட்டன்ஸ் நிறுவனம் இச்சிக்கலை நீதிமன்றத்தின் மூலம் அணுகலாம் என்று திட்டமிட்டது. அதன்படி வாஷிங்டன் நீதிமன்றத்தில் இது குறித்தான வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், 'ட்ரம்ப் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கும் போது, தன்னுடைய அதிகார எல்லையை மீறி செயல்பட்டதாகவும், ட்ரம்பின் இந்த நடவடிக்கையானது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஒன்று' என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்குத் தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.