8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (24.05.2023) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து பேசினார். பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருவரது முன்னிலையிலும் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும் சிங்கப்பூர் இண்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்க்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு போன்றவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் சிங்கப்பூர் - இந்தியா கூட்டாண்மை அலுவலகம், தமிழ்நாடு அரசின் சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் சண்முகத்துக்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடம் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்தார். இதற்கு, மத்திய அரசிடம் பேசி சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்பிளேட்டர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.விஷ்ணு, டைசல் நிறுவனத்தின் வணிக இயக்க பிரிவு தலைவர் இயக்குநர் கென் பாண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் . கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் கென் பாண்டோவை சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்தார்.