Skip to main content

"டெல்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய உரிமை இருக்கிறது..ஆனால்" - பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிங்கப்பூர்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

singapore high commissioner

 

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும், மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், சிங்கப்பூரில் சமீபகாலமாகப் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ், குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்றும், அது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும்  அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூருடனான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை, சிங்கப்பூரில் பரவி வருவது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா என்றும், சிங்கப்பூர் வகை கரோனா என எதுவுமில்லை எனவும் தெரிவித்தது.

 

மேலும், சிங்கப்பூர் அரசு, அந்தநாட்டிற்கான இந்தியத் தூதரை அழைத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கரோனாவிற்கெதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதியான நண்பர்களாக இருந்து வருகின்றன. கரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கவும் மையமாகவும், ஆக்ஸிஜன் விநியோகஸ்தராகவும் சிங்கப்பூரின் பங்கைப் நன்றி பாராட்டுகிறோம். எங்களுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பிய அவர்களின் செயல் எங்களிடையே உள்ள சிறப்பான உறவைத் தெரிவிக்கிறது. மேலும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகள் நீண்டகால உறவைச் சேதப்படுத்தும். எனவே நான் தெளிவுபடுத்துகிறேன் டெல்லி முதல்வர் இந்தியாவிற்காகப் பேசவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்தநிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், கெஜ்ரிவால் மீது தங்கள் நாட்டு சட்டப்படி வழக்கு தொடர தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இன்று காலை, டெல்லியில் உள்ள ஒரு முக்கிய நபர் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் உண்மைகளை அறியத் தவறிவிட்டார் என்ற கவலையைத் தெரிவிக்க இந்தியத் தூதரை அழைத்தோம். இதனிடையே, கரோனா உருமாற்றம் குறித்துப் பேச டெல்லி முதல்வருக்கு போதுமான திறன் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதேபோல், கரோனாவிற்கெதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா உறுதியான நண்பர்கள் என்றும், டெல்லி முதல்வர் இந்தியாவுக்காகப் பேசவில்லை என்றும், அவர் கூறிய கருத்துக்கள் பொறுப்பற்றவை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தோம். 

 

இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். ஏனெனில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்கள் அளித்த உத்தரவாதங்களால் நாங்கள் மனம் மகிழ்கிறோம். டெல்லி முதல்வரின் கருத்துக்கள் கரோனாவிற்கெதிரான நமது (இந்தியா-சிங்கப்பூர்) போராட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சிங்கப்பூரில் தவறான தகவல்களுக்கு எதிராக போஃப்மா சட்டமுள்ளது. அதை டெல்லி முதல்வர் கூறிய கருத்துக்கள் மீது பயன்படுத்த எங்களுக்கு உரிமையுள்ளது. இருப்பினும் இந்திய அரசின் தெளிவுபடுத்தலில் நாங்கள் திருப்தியடைகிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மீனவர்கள் விவகாரம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Regarding the issue of fishermen, CM MK Stalin insistence

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியிருந்தேன். இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் ஆகும். எனவே இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.