Skip to main content

அதே நாளில் சிங்கப்பூரில் கிம் ஜாங்-உன்னுடன் சந்திப்பு உறுதி-ட்ரம்ப்

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

 

வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான சந்திப்பு அதே நாளில் சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே தேதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமென்று தற்போது அறிவித்துள்ளார். 

 

trump

 

ஒரு மூத்த வடகொரிய அதிகாரியுடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு டிரம்ப் இதை அறிவித்துள்ளதாக செய்திகள் அடிபட்டது. 

இந்த பேச்சுவார்த்தையின்போது வட கொரியாவின் தூதுவராக சென்ற ஜெனரல் கிம் யோங்-சோல், அந்நாட்டு தலைவர் கிம் அளித்த கடிதம் ஒன்றை டிரம்ப்பிடம் வழங்கினார். முதலில் அந்த கடிதம் "மிகவும் ஆர்வமூட்டும்" வகையில் இருப்பதாக கூறிய டிரம்ப், பிறகு தான் அந்த கடிதத்தை திறக்கவே இல்லை என்று கூறினார். ''வட கொரிய தூதருடனான இன்றைய சந்திப்பு நன்றாக நடந்தது. வரும் ஜூன் 12ஆம் தேதி நாங்கள் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளோம்" என்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

 

மேலும் கொரியப் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் சிங்கப்பூர் உச்சி மாநாட்டின்போது முன்வைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாமற்றும் வடகொரியாவுக்கிடையே 1950 முதல் 1953 வரை நிலவிய சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே தவிர, இன்றுவரை இறுதி சமாதான உடன்படிக்கை எட்டப்படவில்லை.
 

trump

 

வட கொரியாவின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் குறித்த இறுதி உடன்பாடு இந்த சந்திப்பு மூலம் எட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று அவர் அப்போது தெரிவித்தார். "இந்த உடன்பாடு ஒரே சந்திப்பில் எட்டப்படும் என்று நான் எப்போதும் கூறியதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாக இருக்கப்போவதாக நான் நினைக்கிறேன். ஆனால், இருநாடுகளுக்கிடையேயான உறவு மேம்பட்டு வருவது நேர்மறையானது" என்று டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.

 

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன் இடையே இந்த சந்திப்பு நடைபெறும் பட்சத்தில், இருநாட்டு தலைவர்களும் சந்திப்பது அதுவே வரலாற்றில் முதல் முறையாக இருக்கும்.

வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை திரும்பப்பெற்றால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு உதவுவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சில வடிவங்களில்தான் "அணு ஆயுத விலக்கலை" ஆதரிப்பதாக கூறும் கிம் ஜாங்-உன்னின் கோரிக்கைகள் தெளிவாக இல்லை என்ற கருத்தே நிலவிவருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்