Skip to main content

இரவு பகலாகச் சித்ரவதை அனுபவிக்கும் பாலஸ்தீன கைதிகள்; இஸ்ரேல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Palestinian prisoners are tortured day and night in Israel  jails

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 37 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திகொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகள் இரவு பகல் பாராது தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா 8 மாத காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், “இஸ்ரேலிய சிறையில் இரவு பகலாக சித்ரவதைக்கு பாலஸ்தீன கைதிகள் உள்ளாக்கப்படுகின்றனர். பல கைதிகள் விசாரணையில் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேலிய மருத்துவர்களும், செவிலியர்களும் கைதிகளை அடித்து கொடுமைப் படுத்துகின்றனர். சாப்பிடுவதற்கு சரியான உணவு பொருட்கள் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ரொட்டிக்கு மேல் சாப்பிடவில்லை. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன கைதிகளை உயிரற்ற பொருளாகவே பார்க்கின்றனர்” என்று கண்கலங்கினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காசா போர் எதிரொலி; இஸ்ரேலுக்கு எதிராக மாலத்தீவு அதிரடி முடிவு!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Maldives action against Israel!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்ததாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 45 பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் பரவலாக பேசப்பட, பலரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரபா’  ‘ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவில் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாலத்தீவு உள்துறை அமைச்சர் அலி இஹூசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “அதிபர் மொஹமட் முய்ஸு, அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாஸ்போர்ட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் நுழைவதைத் தடுக்க இந்நாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முற்றிலும் மீறுவதாகும்” என்று கூறினார். 

மாலத்தீவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களுக்கு இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூறுகையில், ‘மாலத்தீவுகள் இனி இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்பதால், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்கும் மற்றும் மிகுந்த விருந்தோம்பல் உபசரிக்கும் சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகள் இங்கே உள்ளன’ என்று அறிவித்துள்ளது. 

Next Story

பாலஸ்தீன விவகாரம்; இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
the Palestinian issue; The central government's explanation of India's position!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பாலஸ்தீனம் விவகாரம் குறித்து பேசுகையில், “பாலஸ்தீனத்தை இந்தியா எப்போதோ அங்கீகரித்துவிட்டது. 1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது. எனவே இந்தியாவின் இந்த முடிவில் மாற்றம் இல்லை. நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தற்போதுதான் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன” எனத் தெரிவித்தார்.  சமீபத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்திருந்தது குறிப்படத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட் விவகாரம் குறித்து பேசுகையில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் விதிகளின்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மே 23  ஆம் தேதி அன்று, நாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம். எனவே  நாங்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். மேலும் சட்ட விதிகளின்படி அடுத்த நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.