இந்திய பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர்! கரோனா பரவல் காரணமாக இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதியிலிருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரவும், தங்கள் நாட்டின் வழியாக வேறு நாட்டிற்கு செல்லவும் அந்தநாட்டு அரசு அனுமதியளித்தது.
அதேநேரத்தில், அந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் சிங்கப்பூரில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருந்தால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ள இந்தியா, இந்தோனேசியா பயணிகள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. அதேபோல் டிசம்பர் ஆறிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டு பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.