துபாயில் 16 வயது இந்தியச் சிறுமிக்கு கரோனா தொற்று பரவியிருப்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
சுமார் 80 நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா வைரஸால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 வயது இந்தியச் சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை தொழில்முறை பயணமாக வெளிநாடு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து சிறுமிக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக துபாய் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தை, மகள் இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சத்தை தொடர்ந்து துபாயில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.