சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 31,161 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 636 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சீனாவை கடந்து, இந்தியா உட்பட உலகின் 23 நாடுகளில் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஜப்பானில் 45 பேரும், சிங்கப்பூரில் 28 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிருக்கு அடுத்து, தாய்லாந்தில் 25, தென்கொரியாவில் 23, ஆஸ்திரேலியாவில் 14, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் தலா 12 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் பிரிட்டனில், இந்த வைரஸ் தொற்று இதுவரை மூன்று பேரை பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவலை தடுக்க துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பாதிப்புகள் உலக அளவில் இருந்தாலும், சீனாவிற்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் என இரண்டு பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இந்த வைரஸ் பாதிப்பால் பொருளாதார ரீதியில் சீனா மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுவர மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.