Skip to main content

லஞ்சம் கொடுத்ததற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அபராதம்... அமெரிக்காவில் பறந்த தமிழக மானம்...!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடர்பட்ட வழக்கில் அந்நிறுவனத்திற்கு அமெரிக்க பங்குச் சந்தை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.  

 

cognizant


2014-ம் ஆண்டு, சென்னையில் காக்னிசன்ட் நிறுவனம்  அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு அதிகாரிகள் 20 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக கேட்டதாகவும் அதனை வழங்கியதாகவும் அந்நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


இது தொடர்பான வழக்கில் நியூஜெர்சியிலுள்ள நீதிமன்றம், நிறுவனத்தின் அப்போதையத் தலைவர் கோர்டன் கோபுர்ன் மற்றும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஷெவார்ட்ஸ் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இவர்கள் இருவரும் தங்களது ஒப்பந்ததாரர் மூலம் இத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்ததாகவும், இவ்விதம் இலஞ்சமாக வழங்கிய தொகையை தனது சகாக்களுக்கு தெரிவிக்காமல் அதற்கேற்ப ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய தொகையை மாற்றியதும் தெரியவந்துள்ளது. 

 

இவ்விவகாரத்தில் நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம் விதிப்பது மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை பங்கு சந்தை அமைப்பு மேற்கொண்டது. 

 

இந்த வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு விதிமீறல் நடவடிக்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை  அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டி சௌசா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகை நிறுவனத்தின் உள் நிதி ஆதாரம் மூலம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்