Skip to main content

பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளுவதில் இந்த நாடுதான் முதல் இடம்!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதம் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது 255 ஆக இருந்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக சீனா 48 பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள துருக்கி 47 பத்திரிகையாளர்களை சிறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், முந்தைய ஆண்டைவிட இது குறைவு. 2018இல் துருக்கியில் 68 பத்திரிகையாளர்கள் சிறைக்குச் சென்றார்கள்.



சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் தலா 26 பேரும் எரித்ரியாவில் 16 பேரும் வியட்நாமில் 12 பேரும் ஈரானில் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரம், நிலையற்ற தன்மை, போராட்டங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன எனவும் இவற்றால் கைதான பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களைப் பற்றியது மட்டுமே. பயங்கரவாத அமைப்புகள் போன்ற பிறரால் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரம் இதில் இடம்பெறவில்லை.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை மிக முக்கியம்” - பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

Published on 17/03/2023 | Edited on 18/03/2023

 

Justice D Raja said that journalism is very important   development  democracy

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை வைத்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். சங்கத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து செய்திகளை வழங்கி வரும் நிலையில் அவர்களுக்காக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட இந்த சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.சுப்ரமணி தலைவராகவும், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் டி.ரமேஷ்குமார் செயலாளராகவும், துணைத் தலைவராக ராம்ஜியும் தேர்வாகியுள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத் நினைவு சொற்பொழிவாற்றினார். ஊடகங்களும் லட்சுமண ரேகையும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிய அவர், ஜனநாயகத்தில் பத்திரிகைகள் முக்கியமானவை என்றும் அரசியல் சாசனத்தின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமே பத்திரிகை சுதந்திரம் என்றும் குறிப்பிட்டார். பத்திரிகைகள் தங்கள் வரம்பை மீறாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊடக விசாரணை என்ற பெயரில் ஒருவர் மீது குற்றம்சாட்டி பின் நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்படும் போது அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்ட முடியாது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

 

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உரை, “லட்சுமண ரேகையை பின்பற்றியவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கியுள்ளேன். சட்டம் இயற்றும் சட்டமன்றத்தின் அதிகாரத்தில் அதிகாரிகள் தலையிடும் போது நீதித்துறை தலையிடும். சட்டமன்றம், அதிகாரிகள், நீதித்துறை ஆகிய அமைப்புகளுக்கு பிறகு நான்காவது தூணாக பத்திரிகைத் துறை உள்ளது. வரம்பை தாண்டாமல் பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் பின்தொடரும். போஸ்ட் கார்டை கூட நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ள முடியும். அதுதான் பொது நல வழக்கு. நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு பொது நல வழக்கு பலன் தரும். அதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம். அனைவருக்கும் கருத்து, பேச்சு சுதந்திரம் உள்ளது. பத்திரிகைக்கு என தனி உரிமை இல்லை. கருத்து, பேச்சு சுதந்திரம் தான் பத்திரிகைகளுக்கான சுதந்திரம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2002-22 -வரை உள்ள கால கட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் பத்திரிகைகள் உள்ளன. பொள்ளாச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கும் முன், குறிப்பிட்டவரின் மகன், சகோதரர் சம்பந்தப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்லத் துவங்கி விட்டனர். ஊடக விசாரணை என்ற பெயரில் இவர்கள் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிப்படுத்த முடியாது. லட்சுமண ரேகையை பின்பற்ற வேண்டும். காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது. செய்திகளை வெளியிடும் முன் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

 

1950ல் மும்பையைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் வெளியிட்ட பத்திரிகைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. முதல் பிரதமரின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த அந்த பத்திரிகைக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செய்தி தெரிவிப்பது நாட்டுக்கு முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. வரம்புகளை மீறும்போது வரும் பின் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை முக்கியம் அதுமட்டுமல்லாமல் நியாயமாக நடக்க வேண்டும். ஜனநாயகத்தில் 4 தூண்கள் மட்டுமே உள்ளது. அதில் 4வது தூண் தான் ஊடகங்கள். இந்திய அரசியல் அமைப்பில் 19வது சரத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அடிப்படையில் ஊடகங்கள் நான்காவது தூணாக கருதப்படுகிறது. ஏழை எளிய சாமானிய நபர்களும் நீதிமன்றத்தை நாடலாம் என்று ஆழமாக விதைக்க முக்கிய காரணம் ஊடகங்கள். சில வழக்குகளில் நீதிமன்றம் சொல்லும் முன்பே பத்திரிகைகள், இவர் குற்றவாளி என்று சொல்வது நடக்கிறது.  இது எப்படி சரியாக இருக்கும்.? வழக்கு விசாரணை நடந்து நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்ற நிலை கூட வரலாம். ஆனால் அவர் குற்றவாளி என்று பத்திரிகை எழுதிய பிறகு அவர் சமுதாயத்தில் சாதாரணமாக நடக்க முடியுமா? அதனால் தான் பத்திரிகைகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜாவை கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம்; முதல்வருக்கு நன்றி தெரிவித்த பத்திரிகையாளர் சங்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

jkl


"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி.இளையராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது, " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கிய நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

 

"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவோம் என அறிவித்தார். அதன்படியே செயலாற்றியும் வருகிறார்.

 

பத்திரிகையாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

 

அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு இன்று ஆணைகளை வழங்கியுள்ளார்.

 

அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும் மற்றும் நமது "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மேலும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., செய்தித் துறை துணை இயக்குநர் மேக வண்ணன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தமது நன்றி அறிக்கையில் கூறியுள்ளனர்.