இங்கிலாந்தில் மீண்டும் ஒரு புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், பிறழ்வடைந்து புதிய வகை கரோனவாக மாறியுள்ளதாகவும், இது முந்தைய வைரஸை விட 70 சதவீதம் வேகமாகப் பரவும் எனவும் அண்மையில் கண்டறியப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் அதிகம் பரவி வரும் இந்த கரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்திலிருந்து விமானங்கள் வர இந்தியா, கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய கரோனா வைரஸ் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்த இரண்டு பயணிகளுக்கு இந்த புதிய வகை கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பிறழ்வை விட சக்திவாய்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்தை இங்கிலாந்து தடை செய்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக், "தென்னாப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்திற்கு உடனடி கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். புதிய வைரஸ் பாதிப்புக்கான இரண்டு வழக்குகள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிறழ்வு மிகவும் கவலை தருவதாக உள்ளது. ஏனெனில் இது இன்னும் அதிகமாகப் பரவலாம். மேலும் இது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய பிறழ்வை விட மேலும் மாறுபட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.