புளூ ஹேலிபட் என்ற மீனை பிடிக்க முயற்சி செய்த ஒருவருக்கு தூண்டிலில் அறிய வகை மீன் ஒன்று மாட்டியுள்ள சம்பவம் நார்வே நாட்டில் நடந்துள்ளது.
நார்வே நாட்டில் நார்டிக் சீ ஆங்கிளிங் என்ற மீன்பிடி நிறுவனத்தில் வழிகாட்டியாக பணிபுரிந்து வருபவர் ஆஸ்கார் லுன்டால் என்ற 19 வயது இளைஞர். இவர் புளூ ஹேலிபட் என்ற மீனை பிடிப்பதற்காக கடலுக்குள் தனது குழுவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது அந்த மீனை பிடிப்பதற்காக தூண்டிலிட்டு காத்துக்கொண்டிருந்த அவரின் தூண்டிலில் பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மீனை வெளியே எடுத்து பார்த்த அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
ஏனென்றால் மிகப்பெரிய கண்கள், வாய் ஆகியவற்றை கொண்ட ஒரு புதிய வகை மீனை அவர் பிடித்திருந்தார். இந்த அரிய மீனை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், இது ரேட்பிஷ் எனும் அறிய வகை மீன் எனவும், கடலின் அடியில் வாழ்வதால் இதனை பிடிப்பது அதிசயமான ஒன்று எனவும் கூறியுள்ளனர். கடல் ஆழத்தில் இருளிலும் காண்பதற்கு வசதியாக இவ்வளவு பெரிய கண் அவற்றுக்கு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஏலியன் போன்ற வித்தியாசமான உருவ அமைப்பு உடைய இந்த மீன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.