Skip to main content

பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்; திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Youth lost their life at Trichy Central Bus Station
கோப்புப்படம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்குச் செல்ல பரபரப்புடன் இருந்தனர். அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் வாலிபரை கடக்க முயன்றபோது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பதும் திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சின் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக தற்கொலை முயற்சி செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை. பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கு இடையில், அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்