வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (14.11.2023) மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது நாளை (15.11.2023) காலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், அது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நாளை (15.11.2023) காலை 08.30 மணி வரை கனமழை பெய்யும். இதனால் சென்னைக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நாளை காலை 08.30 மணி வரையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், நாகப்படிணம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை (15.11.2023) காலை 08.30 மணி வரை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.