Skip to main content

கோயம்பேட்டில் பயங்கரம்... பெண் எரித்துக் கொலை!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Woman passes away in koyambedu bus stand


சென்னை, கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்துசெல்கின்றனர். சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் கோயம்பேட்டிலிருந்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. எப்போதுமே, பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், இரவு நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் தூங்குவார்கள். வெளியூர் செல்ல பஸ் கிடைக்காதவர்கள், வெளியூரிலிருந்து சென்னை திரும்பி, சென்னை புறநகர்ப் பகுதிக்குச் செல்ல முடியாதோர் பலரும், அப்பேருந்து நிலைய வளாகத்திலேயே ஓய்வெடுப்பார்கள். 

 

இந்தநிலையில், இன்று அதிகாலை, 2 மணி அளவில் ஒரு பெண் அலறும் சத்தம் அனைவரையும் கதிகலங்கச் செய்தது. அந்தப் பெண் தீயில் எரிந்தபடி தரையில் உருண்டு புரண்டு சத்தம் போட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதேநேரத்தில், ஒரு மர்ம நபர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் அவர்தான் அந்தப் பெண்ணை தீவைத்து எரித்தார் என்று நினைத்து தர்ம அடிகொடுத்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.

 

காவல்துறையில் பிடித்துகொடுக்கப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தீயில் எரிந்த பெண்ணின் பெயர் சாந்தி என்றும், திருமணமாகி கணவரை பிரிந்து ஸ்ரீராம் என்பவரை இரண்டாவதாக மணந்துகொண்டார் என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் அப்பகுதியில் மாநகராட்சி ஒப்பந்தப் பணி செய்துவரும் தூய்மைப் பணியாளர்கள் என்று அந்த நபர் தெரிவித்தார். இந்த நிலையில், அவ்விருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே சாந்தி, முத்து என்ற மற்றொரு தூய்மைப் பணியாளருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துவந்துள்ளார். இவர்கள் இருவரும் பேருந்து நிலைய வளாகத்திலேயே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். 

 

இதற்கிடையில், இரண்டாவது கணவர் ஸ்ரீராம், சாந்தியுடன் அதே பேருந்து வளாகத்திலேயே மீண்டும் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளார். இதனால், ஏமாற்றம் அடைந்த முத்து, இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டு தண்ணீர் கேனில், பெட்ரோல் பிடித்துவந்து இருவர் மீதும் ஊற்றி எரித்துவிட போதையில் திட்டம் தீட்டியுள்ளார். திட்டப்படி பெட்ரோல் கொண்டுவந்தபோது, சாந்தி மட்டுமே வளாகத்தில் படுத்திருந்துள்ளார். இதனைக் கண்ட முத்து, சாந்திமீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். சாந்தி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம், ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டபோது ஸ்ரீராம்தான் தீவைத்துவிட்டார் என்று பொதுமக்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில், பேருந்து வளாகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது சாந்தி மீது தீவைத்தது முத்து என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் பிடித்த கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது” - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிட்ப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.