Skip to main content

தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அநாகரிக பேச்சு; பெண் தற்கொலை

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman lost their life indecent speech of private financial institutions employees

 

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியில் இயங்கிவருகிறது பைவ் ஸ்டார் என்கிற தனியார் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் கிராமங்கள், நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கு குறைந்த வட்டி, இன்சூரன்ஸ் என பல ஆசைகளைக் காட்டி கடன் தருகின்றன. கடன் தரும்போது தேன் போல் பேசுபவர்கள் கடனை வசூலிக்கும்போது வார்த்தைகளில் விஷத்தை கக்குகின்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

ராணிப்பேட்டையை சேர்ந்த கீதா என்கிற பெண்மணி கடன் பெற்று சரியான முறையில் தவணை கட்டிவந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. தினமும் அவரது வீட்டுக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் அவரிடம் கடுமையாக பேசியும், மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்தால் பயந்து நடுங்கியுள்ளார். இதனால் செப்டம்பர் 26ஆம் தேதி மதியம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கீதாவின் உறவினர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்கள் அப்போதும் அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான உறவினர்கள், பொதுமக்கள் சென்னை - சித்தூர் செல்லும் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

போராட்டத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த போலீஸார் புகார் தாருங்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என உத்தரவாதம் தந்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். நிதி நிறுவன அலுவலர்களிடம் ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு வரவேண்டுமென போலீஸார் அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்