Skip to main content

சாக்கு மூட்டையில் பெண் பிணம் - அமைச்சரின் மாமனார் வீட்டு டிரைவர் சிக்கினார்

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
arrested


கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சாக்கடை கால்வாயில் சாக்கு  மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றிய மணிவேல் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் வீட்டிலிருந்து மாயமானதாக அவரது கணவர் சிவகுமார் கடந்த 18-ந் தேதி ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அடுத்த சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலம் ஒன்று கிடப்பதாக சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.
 

அதன் பேரில் அங்கு சென்ற சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் அழுகிய நிலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டவாறு சாக்கு மூட்டையில் இருந்த சடலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது  ஏற்கனவே காணாமல் போன ஜெயந்தி என்பது தெரியவந்தது. மேலும் தகாத உறவு காரணமாக அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
 

இதையடுத்து மனைவி காணவில்லை என புகாரளித்த  கணவர் சிவகுமாரிடம் ராமநாதபுரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயந்தி ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையிலுள்ள சுகாதாரத்துறை  அமைச்சர். விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் வேலை செய்து வந்ததும் சில நாட்களாக அங்கு பணியாற்றி வந்த ஓட்டுநர் மணிவேலுவுக்கும் ஜெயந்திக்குமிடையே பழக்கம் இருந்ததும் அம்பலமானது. 
 

தொடர்ந்து மணிவேலை பிடித்து விசாரித்ததில் ஜெயந்தி மீது மோகம் கொண்டு அவரை பலாத்காரப்படுத்த முயன்றதாகவும் அவர் ஒத்துழைக்காததால் வீட்டிற்கு அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து  கடந்த 18ம் தேதி இரவு நைலான் கயிற்றால் ஜெயந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நான்கு சவரன் சங்கிலியை கொள்ளையடித்ததுடன் உடலை சாக்கு பையால் கட்டி தனது இரு சக்கர வாகனம் மூலம் கொண்டு சென்று குளத்தேரி சாக்கடை கால்வாயில் வீசி சென்றதாகவும் மணிவேல் ஒப்பு கொண்டுள்ளார். தொடர்ந்து மணிவேலை கைது செய்துள்ள போலீசார் இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்