Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ மிரட்டல்; கண்ணீர் விட்டு அழுத பெண் கமிஷனர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
The woman commissioner burst into tears for AIADMK MLA threatened

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத் தலைவராக அருள் வடிவு என்பவரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜ் நேற்று (23-01-24) வந்தார். இதனையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி ஆணையாளர் (கமிஷனர்) அமுதாவின் அறைக்குச் சென்று, அவரிடம் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கமிஷனர் அமுதா, எம்.எல்.ஏ மிரட்டியதால் பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவினைக் கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்குச் சென்றுள்ளனர். அங்கு கமிஷனர் அமுதா அழுது கொண்டிருந்ததைப் பார்த்த நகராட்சி தலைவரும், துணைத் தலைவரும் கமிஷனரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்துள்ளனர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜ், ‘நான் பேசிக்கொண்டிருக்கும் போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?’ என நகராட்சி தலைவரையும், துணைத் தலைவரையும் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள், அங்கு சென்று அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டிஜிபி பாலாஜி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினரை சமாதானப்படுத்தினார். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.வால் நகராட்சி கமிஷனர் அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்