Skip to main content

தொலைக்காட்சி விவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்!

Published on 10/06/2018 | Edited on 11/06/2018


கோவையில் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சியின் சார்பில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர் அமீர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஊடக கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சிக்காக அதன்மீது வழக்கு, அமீர் போன்ற கலைஞர்கள் மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்காகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக் கூடிய அளவிற்கு அதீதமாகச் சென்றுள்ள நிலையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்து கலவரம் செய்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் மீது எந்த வழக்கும் இல்லாததும், விவாதத்தில் பங்கேற்றவர்கள் மீதே வழக்குகளைப் போட்டிருப்பது என்பதும் அடித்தவனை விட்டு விட்டு, அடிபட்டவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் கொடுஞ் செயலாகும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே நிலவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்