Skip to main content

"பெரியார் பல்கலைக்கழகத்தின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" - ஆர்.டி.ஐ!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Why  should not take action Periyar University Tamil Nadu Information Commission

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி செய்துள்ள இதழியல் துறை பேராசிரியரான நடராஜன், லஞ்ச ஒழிப்புத்துறை விசாராணையில் சிக்கியுள்ளார்.


இது தொடர்பாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து சித்தனூரைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர், 'தனக்கு சில தகவல் வேண்டும்' என பல்கலைக்கழக பொதுத் தகவல் அலுவலருக்கு முறையிட்டிருந்தார்.

 
பொதுத் தகவல் அலுவலர் தகவல்தர மறுக்கவே, மேல்முறையீட்டு அலுவலரிடம் கேட்டார். அவரும் தரமறுக்கவே, சென்னை தகவல் ஆணையத்திடம் முறையிட்டார். தகவல் ஆணையம், 'இவர் முறையீட்டை விசாரித்து தகவல்தர பல்கலை நிர்வாகம் மறுப்பது ஏன்? தகவல் கேட்பவரை பழி வாங்குவது ஊழலுக்கு பல்கலைக்கழகம் துணைபோவதுபோல் உள்ளது' எனக் கண்டனம் தெரிவித்து, தகவலை உடனே அளிக்க உத்தரவும் பிறப்பித்தது.

 

அதனையும் மதிக்காமல் தகவல் அளிக்க மறுத்துவரும் பல்கலைக்கழகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி மீண்டும் தகவல் ஆணையத்தை வைத்தியநாதன் நாடினார்.  தகவல் ஆணையம் தகவல் தர மறுக்கும் பெரியார் பல்கலைக்கழகம் மீது, விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அதில், 'தொடர்ந்து தகவல் அளிக்க மறுக்கும் காரணம் பற்றி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தங்கள் மீது தகவல் ஆணையச் சட்டம் 20(1) 20(2)ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேள்வி எழுப்பி உள்ளது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தகவல் தர மறுத்த காரணத்திற்காக துறை ரீதியான நடவடிக்கை மற்றும் தகவல் தர மறுத்ததற்காக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

இந்த நோட்டீஸ் விவகாரம் பல்கலைக்கழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தகவல் கோரும் ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஊழல் புகாரில் சிக்கி உள்ளவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்